search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்னி பஸ்கள்"

    • தொடர் விடுமுறை முடிந்து வெளியூர் சென்றுள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ளனர்
    • அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த இரு தினங்களாக ஆம்னி பஸ்களை அதிகாரிகள் சோதனையிட்டதில் முறையான ஆவணம் இல்லாதது உள்பட பல்வேறு குற்றச்சாட்டின் பேரில் 120 பஸ்கள் பிடித்து வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த பஸ்களில் முறையான ஆவணங்கள் வைத்திருந்தும் சில பஸ்களை பிடித்து வைத்துள்ளதாகவும், இதனால் பஸ்களை விடுவிக்காவிட்டால் இன்று மாலை 6 மணி முதல் பஸ்களை இயக்க மாட்டோம் என்றும் ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    இதைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆம்னி பஸ் சங்க தலைவர்களுடன் போனில் பேச்சுவர்த்தை நடத்தினார். போக்குவரத்து கழக அதிகாரிகளை சந்தித்து பேசி போராட்டத்தை கைவிடும்படி அவர்களிடம் எடுத்துக் கூறினார். அதன் பேரில் போக்குவரத்து துறை அதிகாரி சண்முகசுந்தரத்தைச் சந்தித்து ஆம்னி பஸ் சங்கத்தினர் பேசினார்கள்.

    இதுகுறித்து அமைச்சர் சிவசங்கரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

    ஆம்னி பஸ் சங்கத்தினருடன் நான் தொலைபேசியில் பேசினேன். அவர்கள் சில கோரிக்கையை சொல்லி உள்ளனர்.

    குறிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்ட பஸ்களில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்கள். தவறு இழைக்கும் பஸ் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த கருத்து மாறுபாடும் இல்லை என்று தெரிவித்தனர். எனவே நான் அதிகாரிகளிடம் சொல்லி உள்ளேன். ஆகவே பிடித்து வைத்துள்ள பஸ்களை ஆய்வுசெய்து தவறு இல்லை என்றால் பஸ்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மற்ற பஸ்கள் நடவடிக்கைக்கு உட்படும். ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

    அதேபோல் வெளிமாநில பதிவு பஸ்களை ஓட்டுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இப்போது பண்டிகை விடுமுறை காலமாக இருப்பதால் மக்களை பாதிக்காத வகையில் மேலும் கூடுதல் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    எப்படி இருந்தாலும் இந்த விஷயத்தில் ஆம்னி பஸ் சங்க நிர்வாகிகளுடன் அரசு அதிகாரிகள் பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள். எனவே பேச்சுவார்த்தையில் போராட்டம் வாபஸ் ஆகி விடும் என எதிர்பார்க்கிறேன்.

    கூடுதல் கட்டணம் பிரச்சினை வராமல் இருப்பதற்காக தீபாவளி பண்டிகைக்கு முன்பாக கடந்த ஆண்டை போலவே ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

    அதன்பிறகும் அவர்கள் ஏதும் தவறு செய்தால் அது குறித்து புகார் செய்வதற்கு தீபாவளிக்கு முன்பாக தொலைபேசி எண் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே ஆம்னி பஸ்களில் மற்றொரு சங்கமான தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் மாறன் கூறுகையில், "ஆம்னி பஸ்கள் அனைத்தும் இயங்கும். பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்" என்று கூறினார்.

    இந்நிலையில், தமிழ்நாடு ஆம்னி பஸ்கள் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து ஆம்னி பஸ் நிர்வாகிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. சென்னை கே.கே.நகரில் உள்ள அலுவலகத்தில் போக்குவரத்து துறை இணை ஆணையர் தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வைத்த கோரிக்கைகளை அதிகாரிகள் கவனமுடன் பரிசீலித்தனர். அரசு தரப்பிலும் பல்வேறு நிபந்தனைகள் வைக்கப்பட்டன. இவைகள் அனைத்தும் பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து ஆம்னி பஸ் நிர்வாகிகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

    • தொடர் விடுமுறை முடிந்து வெளியூர் சென்றுள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ளனர்
    • இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பஸ்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    சென்னை:

    பண்டிகை, விடுமுறை மற்றும் முக்கிய சிறப்பு நாட்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்தாலும் கடைசி கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புறப்படுவதால் போக்குவரத்து சேவையை அதிகமாக்குவது அவசியமாக மாறிவருகிறது.

    இந்நிலையில், தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் நடத்தும் ஆம்னி பஸ்களை நாடி வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குறிப்பாக, தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதுவதை காணமுடிகிறது.

    இதையடுத்து ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்ந்து விடுகிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் இரட்டிப்பு கட்டணம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    தற்போது ஆயுதபூஜை விடுமுறை தொடர்ந்து 4 நாட்கள் வந்ததால் ஆம்னி பஸ்களின் கட்டணம் அதிகளவு உயர்த்தப்பட்டு விட்டதாக புகார்கள் எழுந்தன. சில ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 150 சதவீதத்துக்கும் அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

    இதற்கிடையே ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது. இதற்காக அதிரடி சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

    அப்போது அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறி 120-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன. அந்த பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுவதும் தடை செய்யப்பட்டது.

    மேலும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக அந்த ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. சுமார் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. பஸ்களை சிறை பிடித்ததோடு அபராதமும் விதிக்கப்பட்டதால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

    ஆம்னி பஸ் கட்டணத்தை ஒழுங்குபடுத்த கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டு இருப்பதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக தென் மாநில ஆம்னி பஸ்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் நிர்ணயம் இல்லாத போதிலும் அரசுக்கும், பயணிகளுக்கும் பாதிக்காத வண்ணம் சங்கங்களே கட்டணம் நிர்ணயம் செய்து கடந்த 2022 செப்டம்பர் மாதம் போக்குவரத்து அமைச்சர் மற்றும் ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்டணம் ஒப்புதல் பெற்று அதே கட்டணத்தில் இன்று வரை இயக்கி கொண்டுள்ளோம்.

    கடந்த 10 நாட்களாக அண்ணாநகர் சரக இணை ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலரும் சங்கங்களுடன் இணைந்து சங்கங்கள் நிர்ணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கண்காணித்து இன்று வரை அதிக கட்டணம் புகார் இல்லாமல் இயங்கி வந்தது.

    இந்நிலையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி மற்றும் 4 நாட்கள் தொடர் விடுமுறை முன்னிட்டு தவறு செய்யாமல் இயங்கிய 120 ஆம்னி பஸ்களை அதிக கட்டணம் என்ற பெயரில் ஆணையரின் தவறான வழிகாட்டுதலின்படி சிறை பிடித்தும், மீண்டும் சிறை பிடிப்பதை நிறுத்தக் கோரியும் இன்று (24-ந்தேதி) மாலை 6 மணி முதல் ஆம்னி பஸ்கள் இயங்காது.

    இன்று ஆம்னி பஸ்களில் 1 லட்சத்துக்கு மேலான பயணிகள் முன்பதிவு செய்துள்ளார்கள். அவர்களை போக்குவரத்து துறை சார்பாக வழியில் இறக்கி விடுவதை தவிர்க்கும் பொருட்டு, அனைத்து சங்கங்களும் இணைந்து வேறு வழியில்லாமல் கனத்த இயத்துடன் இதனை அறிவிக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஆயுதபூஜை தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து மட்டும் சுமார் 5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அதுபோல மற்ற நகரங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று இருக்கிறார்கள். அவர்கள் இன்று மாலை முதல் திரும்புவதற்கு ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்திருந்தனர்.

    இன்று மட்டும் சுமார் 1 லட்சம் பயணிகள் ஆம்னி பஸ்களில் சொந்த ஊர்களில் இருந்து முன்பதிவு செய்திருக்கிறார்கள். ஆம்னி பஸ் உரிமையாளர்களின் ஸ்டிரைக் அறிவிப்பால் அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மாற்று ஏற்பாடுகள் கடைசி நிமிடத்தில் செய்யமுடியாத நிலையில் பெரும்பாலானோர் இன்று சொந்த ஊர்களில் இருந்து புறப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் ஆம்னி பஸ் ஸ்டிரைக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • தசரா திருவிழாவை காண பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
    • பஸ்கள் தேவை அதிகரித்துள்ள நிலையில் அக்டோபர் 21 முதல் 24-ந்தேதி வரை கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மைசூரு தசரா விழா உலக புகழ்பெற்றது. மைசூரு தசரா விழா கடந்த 15-ந்தேதி மைசூரு சாமுண்டி மலையில் உள்ள காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கோலாகலமாக தொடங்கியது. இது 414-வது தசரா விழா ஆகும்.

    தசரா விழா தொடங்கி உள்ளதால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரில் எங்கு பார்த்தாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கி உள்ளதால், மக்கள் கூட்டம் அதிமாக உள்ளது.

    தசரா திருவிழாவை காண பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் ஆயுத பூஜை, விஜய தசமி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.

    இதனால் பஸ்களில் கூட்டம் நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. எனவே பெங்களூருக்கு வெளியே 500 பேருந்துகளை இயக்குமாறு பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கும், கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகத்திற்கும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பஸ்கள் தேவை அதிகரித்துள்ள நிலையில் அக்டோபர் 21 முதல் 24-ந்தேதி வரை கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    இதற்கிடையே முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2 நாட்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது டிக்கெட் முன்பதிவு 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

    நேற்று முன்தினம் ஆன்லைனில் டிக்கெட் வாங்கிய பிறகு 46,000-க்கும் மேற்பட்ட நபர்கள் பேருந்துகளில் பயணம் செய்தனர். மேலும் நேற்று அந்த எண்ணிக்கை 56,000 ஆக உயர்ந்தது. இதனால் 2 நாட்களில் 1 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    விழா காலத்தை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து ஐதராபாத் செல்ல ரூ.3,000, மங்களூருவுக்கு ரூ.2,000, பெலகாவிக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000, ஹுப்பள்ளிக்கு ரூ.1,700 முதல் ரூ.1,900 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கின்றனர். விஜயபுராவுக்கு ஒரு நபருக்கு பயண கட்டணம் 2,500 ரூபாயை தாண்டியுள்ளது.

    • தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து 40-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன.
    • சோதனையில், முறையான அனுமதி இல்லாமல் 2 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில், சுரண்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடை யநல்லூர், செங்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து சென்னை, பெங்களூர்,கோயம்புத்தூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன.

    இதில் எந்த ஆம்னி பஸ்களும் முறையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. இந்த சூழ்நிலையில் தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கண்ணன் தலைமையில் ஆய்வாளர்கள் மணிபாரதி மற்றும் ராஜன்,உள்ளிட்டோர் தென்காசி குத்துக்கல்வலசை சாலையில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது நாகலாந்து மாநிலத்தின் பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களை சோதனை செய்த பொழுது பயணிகளை ஏற்றி இறக்கம் செய்ய தமிழகத்தின் பெர்மிட் உள்ளிட்ட எந்த முறையான அனுமதியும் இல்லாமல் 2 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

    சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்செல்வதற்குமட்டுமே அனுமதிபெறப்பட்டு அதனை ஆம்னி பஸ் இயக்கத்திற்கு பயன்படுத்தியது கண்டறி யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அந்த 2 ஆம்னி பஸ்களையும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்து தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தினர்.மேலும் தகுதிச்சான்று இல்லாததால் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    • வழக்கமாக அரசு விரைவு பஸ்களில் தினசரி 10 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படும்.
    • தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.

    சென்னை:

    பஸ் மற்றும் ரெயில்களில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மட்டும்தான் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். பலர் டிக்கெட் கிடைக்காமல் திண்டாடுவார்கள்.

    ஆனால் வழக்கத்துக்கு மாறாக கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தினமும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    வழக்கமாக அரசு விரைவு பஸ்களில் தினசரி 10 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படும். ஆனால் இப்போது 16 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 36 ஆயிரம் டிக்கெட்டுகள் மாநிலம் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து தினமும் 450 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் அடுத்த சில நாட்களுக்கு டிக்கெட்டுகள் இல்லை. வார இறுதி நாட்கள், முகூர்த்த தினங்களில் வழக்கமாக 1.2 லட்சம் பயணிகள் அரசு பஸ்களிலும், விரைவு பஸ்களிலும் பயணிப்பார்கள். தற்போது அது 1.3 முதல் 1.5 லட்சம் வரை உயர்ந்துள்ளது. பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எதிர்பாராத வகையில் பயணிகள் கூட்டம் அதிகமாக வருவதால் அதை சமாளிக்க சென்னை மட்டுமின்றி விழுப்புரம், கும்பகோணம் கோட்டங்களில் இருந்தும் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அதேநேரம் ஆம்னி பஸ்களில் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூல் வேட்டை நடத்துகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

    சென்னையில் இருந்து கோவை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர் ஆகிய வழித்தடங்களில் கட்டணம் தாறுமாறாக வசூலிக்கப்படுகிறது. அரசு பஸ்களில் திருச்செந்தூருக்கு ரூ.620. ஆம்னி பஸ்களில் ரூ.2000. நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்கள் கட்டணம் ரூ.1500-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. அடுத்த மாதம் 10-ந் தேதி வரை எந்த ரெயிலிலும் இடம் இல்லை. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் உட்கார இடம் இல்லாமல் நின்று கொண்டே பயணிக்கிறார்கள்.

    நெல்லை, கன்னியாகுமரி ரெயில்களில் கூடுதலாக ஒன்றிரண்டு பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பயணிகள் கூறுகிறார்கள்.

    கூட்ட நெரிசல் காரணமாக தென்னக ரெயில்வே தாம்பரம்-நாகர்கோவில், தாம்பரம்-நெல்லை, தாம்பரம்-செங்கோட்டை, சென்னை-கன்னியாகுமரி சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.

    • சென்னையில் மாநகர பஸ்கள் இரவு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • கிழக்கு கடற்கரை சாலை வழியாக புயல் கடக்கக்கூடிய குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பஸ்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. சென்னையில் மாநகர பஸ்கள் இரவு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு கடற்கரை சாலை வழியாக புயல் கடக்கக்கூடிய குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பஸ்களை இயக்க வேண்டாம். என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலூர், மாமல்லபுரம், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள், வரக்கூடிய பஸ்கள் நள்ளிரவில் மாற்றுப்பாதையில் இயக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் கோயம்பேட்டில் இருந்து இன்று ஆம்னி பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என்று அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    • தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 1000 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரூ.3 ஆயிரம், மதுரை, கோவைக்கு-ரூ.2500, திருச்சிக்கு ரூ.1500 முதல் 2000 வரை கட்டணமாக உள்ளது.

    போரூர்:

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை விடுமுறை விட அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    தீபாவளிக்கு முன்பு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்கள் ஆகும். இதன் காரணமாக தீபாவளி பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊர் செல்பவர்கள் வருகிற 21-ந் தேதி(வெள்ளிக்கிழமை) முதலே புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    இதையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 3 நாட்களுக்கு தினசரி வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் கடைசி நேர பயணம் மற்றும் குறித்த நேரத்தில் சொகுசு பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் ஆம்னி பஸ்சை தேர்ந்தெடுத்து செல்கிறார்கள்.

    தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 1000 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 21-ந்தேதி பயணத்துக்கு ஆம்னி பஸ்களில் முழுவதும் முடிந்து விட்டன. சில பஸ்களில் மட்டும் ஒரு சில இருக்கை மட்டுமே காலியாக உள்ளன. ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு அதிகரித்து உள்ளது. வருகிற 22, 23-ந்தேதிகளில் அனைத்து பஸ்களும் நிரம்பி விட்டன.

    சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரூ.3 ஆயிரம், மதுரை, கோவைக்கு-ரூ.2500, திருச்சிக்கு ரூ.1500 முதல் 2000 வரை கட்டணமாக உள்ளது. திருநெல்வேலிக்கு செல்லும் சில ஆம்னி பஸ்களில் ரூ.3500-க்கும் கட்டணம் உள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். எனவே அனைத்து தரப்பினரும் பயணம் செய்யும் வகையில் ஆம்னி பஸ்களில் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறும்போது, கொரோனா தொற்று பாதிப்புக்கு முன்பு ஏறத்தாழ 4 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டது. தற்போது அது மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது என்றார்.

    ×